நம் அன்றாட வாழ்க்கையில் நாம் தினமும் கடந்து போகும் ரயில் நிலையம், டிராஃபிக் சிக்னல், பேருந்து நிலையம், கோவில்கள் முன்னால் நம்மிடம் கையேந்தும் முதியவர்களை பார்க்கும் போது இதயமுள்ள ஒவ்வொருவருக்கும் நெருஞ்சி முள் தைத்தது போல தான் இருக்கும்.
குடும்ப ஏழ்மை எல்லாம் கடந்து, பிள்ளைகளால் கை விடப்பட்ட பெற்றோர்கள் இன்று தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டோ இல்லை எதோ ஒரு முதியோர் இல்லங்களிளோ தங்கள் பிள்ளைகளின் சிறு பிராயத்தை நினைத்துக்கொண்டு கண்ணீருடன் காலம் தள்ளி கொண்டு இருக்குறார்கள்.
தங்களின் பிள்ளைகளின் சந்தோஷத்துக்காக, தங்களின் ஆசா பாசங்களை விட்டொழிந்து, தூக்கம் துறந்து, பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் கண்ணீர் கதைகள் ஏராளம். சொந்த காலில் நின்றால் போதும், யார் தயவும் இனி தேவையில்லை என்ற எண்ணமும், மாறிவரும் கலாச்சாரமும் இக்கால இளைய தலைமுறை பெற்றோரை நிற்கதிக்கு தள்ளுகிறது. இதுவே அவர்களை புறக்கணிக்க காரணமாகவும் அமைகிறது. இந்தியாவில், முதியவர்களில் 40 சதவீதம் பேர் வாரிசுகள் கைவிடப்பட்டவர்களாய் இருகிறார்கள். இதுவே, தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் அமைந்திருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
முதியோரை கண்ணியமாகவும், கவுரவமாகவும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று உலகம் முழுவதும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கங்கள்.
பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு இன்னும் எத்தனை நூற்றாண்டு சொல்ல போகிறோம். ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோரை அன்புடன் பராமரித்தாலே, முதியோர் இல்லங்கள் பெருக வாய்ப்பில்லை. தவறினால், ‘மண்ணில் ஒரு நரகம், முதியோர் இல்லம்’ என்ற வாக்கியம் உண்மையாகி விடும்.
நமக்கும் முதுமை தூரம் இல்லை…!!!!
கண்ணீருடன்,
பிரதீப்