கற்றதும் பெற்றதும் 1

தனது 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘#கற்றதும்_பெற்றதும்’ பகுதியில் #சுஜாதா அவர்கள் எழுதியது:

“மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.

மெரீனாவில் நடக்கும்போது
எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள்.

ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட்
பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

“யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!” என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.

நான் யோசித்து, ”கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ”  என்றேன்.
“எதுக்குப்பா?”
“தொடுங்களேன்!”
சற்று வியப்புடன் தொட்டார்.
“மத்த விரல்களை றெக்கை மாதிரி அசையுங்கோ!” என்றேன்.
”இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன? என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.

“ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து… பாத்து…”
“இது என்னப்பா ட்ரிக்கு?” என்று அப்படியே செய்தார்.

“உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!” என்றேன்.

அசந்து போய், “கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?”

“ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன்னீங்க. மறந்துட்டீங்க!” என்றேன்.

தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன.

ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால்,
எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது.

பெயர் கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை.

‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே… அந்த நடிகையின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒருமணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை. மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். “ரம்யா கிருஷ்ணன்” என்றாள்.

இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்!

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் “ஜகதலப்ரதாபன்” சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது…இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது.

ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராள மாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி’யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது.

ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர் தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.

மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன்.இப்போது புன்னகைக்கிறேன்.

பொதுவாகவே, பொறாமைப் படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற் கான விஷயங்களும் குறைந்து வருகின்றன.

ஹிந்துவின் “ஆபிச்சுவரி” பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன்.

சின்னவராக இருந்தால், ‘பரவால்லை… நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை… இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன்.

எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்…

ஏன், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது வாரக்கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது.

Today I am alright, thank God!

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன்
ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும்,நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன்.

நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்
படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்.

வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்…

முதலிடத்தில்

உடல் நலம்,

மனநலம்,

மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது,

தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது,

இன்சொல்,

அனுதாபம்,

நல்ல காபி,

நகைச்சுவை உணர்வு,

நான்கு பக்கமாவது படிப்பது,

எழுதுவது

போன்றவை பட்டியலில் உள்ளன”-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s