சில நேரங்களில் சில மனிதர்கள்

1972 ஆம் ஆண்டு ஜெயகாந்தனுக்கு சாஹித்ய அகாடமி விருதை பெற்றுத்தந்த நாவல். ஜெயகாந்தன் எழுத்துக்களில் ஈர்க்கப்பட்டவர்கள் மறக்காமல் வசித்து இருக்கும் ஒரு புத்தகம். இந்த நாவலுக்கு 2 வித்தியாசமான குணங்கள் உண்டு.

ஒன்று, ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் சிறுகதை பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். 1960 களில் வெளி வந்த இந்த சிறு கதை பல விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டது.

நல்ல மழை, ஒரு பெண் பேருந்திருக்காக காத்திருக்கிறாள். துணைக்கு அந்த பேரூந்து நிறுத்துமிடத்தில் ஒரு மாடு மட்டும் படுத்து அசைபோட்டுக்கொண்டு இருக்கிறது. அவள் அருகில் ஒரு கார் வந்து நிற்கிறது. காரில் இருந்த படி அவளை அழைக்கிறான் அவன். முதலில் தயங்கிய கங்கா (அவள் பெயர் கங்கா), பின்னர் காரில் பின் இருக்கையில் அமர்கிறாள். அந்த காரின் வாசனை அவளுக்கு பிடிக்கிறது. அன்று அவள் வாழ்வில் நடக்ககூடாத விபரீதம் நடந்தேறுகிறது. அவளை அவன் அவளது வீட்டு பக்கத்தில் இறக்கி விடுகிறான். அவள் வீடு சென்று, தனது தாயிடம் நடந்ததை கூறுகிறாள். ஒண்டி குடுத்தனம் வீடு அது. தான் சத்தம் போட்டு பேசினால் பக்கத்து வீடு வரைக்கும் கேட்கும் என்பது அவளுக்குத் தெரியும். அதிர்ந்த அந்த தாய், நிதானமாக குளியலறைக்கு கூட்டி சென்று அவளின் தலையில் ஜலத்தை கொட்டுகிறாள். அவளை சுத்தமாக குளிப்பாட்டுகிறாள். தலை துவட்டி பின் சொல்கிறாள், “நான் உன் மீது கொட்டியது ஜலம் இல்லடி, நெருப்புன்னு நினைச்சுக்கோ… நீ சுத்தமாயிட்ட…இதை பற்றி யாரிடமும் பேசாதே…” என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறாள். மனமுவந்து கடவுளிடம் பிராத்தனை செய்து, கங்காவையும் வேண்டிக்க சொல்கிறாள். அவள் நெற்றியில் திருநீறு இடுகிறாள். குத்து விளக்கின் நிழலாட்டம் கங்காவின் முகத்தில் ஆடுகிறது. அது வெறும் நிழலாட்டம் அல்ல, அது முழுவதும் வளர்ச்சியுற்ற பெண்ணின் பிரகாசத்தை அந்த தாய் கண்டு கொண்டாள். கங்கா மீண்டும் காலேஜிற்கு செல்கிறாள்.

சுமார் 20 பக்க அந்த சிறுகதையை, என் பாணியில் நான் சொன்ன கதை சுருக்கும் இது. கதை உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதை ஏன் சொல்கிறாய் என்று தானே கேட்கிறீர்கள்?

1960 களில் வெளி வந்த அக்கினிப்பிரவேசம் கதை, பல விமர்சனத்திற்கு ஆளானது. எப்படி ஒரு குடும்பத்தில் ஒரு அம்மா இப்படி நடந்திருக்க முடியும்? அப்ப அவளும் அப்படி பட்டவளாத்தான் இருக்க முடியும் என்பது போல பல விமர்சன கடிதங்கள் ஜெயகாந்தனை வந்தடைந்தன. இதற்கு மாற்றுக்கதை முடிவையும் பலர் அவருக்கு எழுதி அனுப்பி வைத்தனர். அதற்கு மாற்றாக ஒரு நாவலை எழுத வேண்டும் என்று ஜெயகாந்தன் எழுதிய நாவலே இந்த சில நேரங்களில் சில மனிதர்கள். அப்படி அந்த அம்மா அந்த முடிவை எடுக்காமல், கூச்சல் போட்டு, பக்கத்து வீட்டாரை எல்லாம் கூப்பிட்டு விஷயத்தை சொல்லி, இதை சந்தி சிரிக்க வைத்திருந்தாள் அந்த கங்காவின் நிலை என்ன ஆயிருக்கும்? அவள் வாழ்க்கை எந்த திசையை நோக்கி நகர்ந்திருக்கும் என்பதே சில நேரங்களில் சில மனிதர்கள்.

மேற் சொன்ன அந்த முடிவு நடந்தேறி, சுமார் 12 ஆண்டுகள் கழித்து ஆரம்பிக்கிறது இந்த நாவல். கங்காவின் மனநிலை, பேச்சு, திறன், பொறுமை, உலகம், மனிதர்கள் அனைவரும் மாறி இருக்கின்றனர். அவள் அம்மாவை அம்மா என்று அழைத்தே 12 ஆண்டுகள் ஆகின்றது. அவள் இன்னும் கல்யாணம் செய்து கொள்ள வில்லை. அதற்கு தகுதியற்றவள் என்பது தான் அவளின் அண்ணன், அண்ணியின் தர்க்கம். அதை அவள் அம்மாவும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்கிறாள்.

இப்பொழுது நல்ல உத்தியோகத்தில் இருக்கிறாள். நல்ல சம்பளம். அம்மா அவளுடன் இருக்கிறாள். அவளின் அண்ணன் வீட்டை விட்டு துரத்திய பின்னர், கங்காவின் மாமா அவளை படிக்க வைக்கிறார். அவரும் இவள் கல்யாணத்திற்கு லாயிக்கற்றவள், என்பதை முழுமையாக நம்புகிறவர். முடிந்தால் அவளை இந்த நிலைக்கு ஆளாக்கினவனை கண்டுபிடிக்கட்டும் என்று அவர் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்ததை கேட்டு அதற்காக புறப்படுகிறாள். கண்டு பிடிக்கிறாள். அந்த தீயவனை மாற்றுகிறாள். முடிவில் இவளும் மாறுகிறாள்(கனமான முடிவுடன்…)

நாவல் முழுக்க, நடந்த கதையை நம்மிடம் கங்கா விவரித்து கொண்டே இருக்கிறாள் (நம்மிடம் என்பது, நாம் தான் அவளின் மனசாட்சி. அவள் எல்லாவற்றையும் தனது மனசாட்சியிடம் பேசிக்கொண்டே இருக்கிறாள்). ஆங்கிலம், தமிழ் என்று மாறி மாறி சம்பாஷணைகள் வருகிறது. ஆங்கிலம் புரியாதவர்களுக்கு ஜெ.கே தமிழிலும் மொழி மாற்றம் செய்கிறார். அந்த அக்கினிப்பிரவேசம் கதை எழுதிய தன்னை ஒரு கதா பாத்திரமாக (அதே எழுத்தாளாராக) சித்தரித்து அதற்கு பிராயச்சித்தம் தேடியது போல ஆர்.கே.வி யாக ஜெயகாந்தன் வருகிறார். அந்த பாத்திரப்படைப்பு மிகவும் நேர்த்தி.

எந்த சந்தர்ப்பத்திலும் கங்கா தனது நம்பிக்கை மீதும், தனது கொள்கை மீதும், மிகவும் பற்றோடு இருக்கிறாள். அதை சரி என்று நம்புகிறாள். யார் விமர்சனத்திற்கும் செவிசாய்ப்பதில்லை. அந்த பிரபுவை (ஆம், ஆந்த அயோக்கியன் பெயர் பிரபு) அவள் மாற்ற எத்தனிக்கவில்லை. இருந்தாலும் இவளின் குணம் அவனை மாற்றுகிறது. இப்படியும் சில கதைகள் உண்டோ? இப்படியும் நடந்திருந்தால், சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படி தான் நடந்து கொள்வார்களோ என்று யோசிக்க வைப்பது ஜெயகாந்தனின் பாத்திரப்படைப்பிற்கு கிடைத்த வெற்றி.

இன்னொரு குணாதிசயம் உண்டு என்று சொன்னேனே. அது, ஒரு நாவலுக்கு பெயர் மாற்றம் செய்ததாக இது வரை நான் கேள்வி பட்டது இல்லை. ஆனால், இந்த நாவலுக்கு முதலில் ‘காலங்கள் மாறும்’ என்று பெயரிட்ட ஜெ.கே., பின்னர் அதற்கு சில நேரங்களில் சில மனிதர்கள் என்று பெயர் மாற்றம் செய்கிறார். இந்த பெயரே உத்தமம் என்று விளக்கமும் அளிக்கிறார்.

அடுத்த புத்தகம் சுஜாதாவின் 14 நாட்கள்…

அவ்வளவு நாள் தேவை இல்லை. சீக்கிரம் சந்திக்கிறேன்…

அன்புடன், பிரதீப்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s