எனது பாட்டன்

இன்று 11-12-2017. 12-12-2017 என்ற தேதியில் வரும் நினைவு கூட நம்மில் பல பேருக்கு இன்றைய தேதியை பார்த்து வருவதில்லை அல்லவே?

வெறும் பாடபுத்தகத்தில் மனனம் செய்த சாதாரண தேதியாக போய்விட்டது. நாட்காட்டியை கிழிக்கும் போது சில பேர் கவனித்திருக்கக்கூடும். இன்று நம் பாட்டனார் மகாகவியின் பிறந்த நாள். ஆம், இளம் வயதில் தமிழ் இலக்கிய பணி செய்து, அனைவருக்கும் விடுதலை வேட்க்கை தூண்டி, பல அற்புத படைப்புகளை படைத்த மீசை முறுக்கிய எம் மகாகவியின் பிறந்த நாள் இன்று.

தமிழ் தமிழ் என்று வெறும் கூச்சல் இடும் சமூகத்தில் இருக்கிறோம். ஆனால் அன்றே பல மொழிகளில் தேர்ச்சி பெற்று,

“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடினானே…!!!

சிறு பிள்ளைகள் நாள் தோறும் செய்ய வேண்டிய கடமைகளை அழகாக ஓடி விளையாடு பாப்பா மூலம் சொன்னானே…!!!

“காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!”

தனது கனவுகள் எல்லாவற்றையும் சேர்த்து அற்புத வரி தந்தானே…!!!

“காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும் – அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் – அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும் – அங்கு
கேணி அருகினிலே தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பனிரெண்டு தென்னைமரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர்போலே நிலாவொளி
முன்பு வர வேணும் அங்குக்
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதிற் படவேணும் என்றன்
சித்த மகிழ்ந்திடவே நன்றாயிளந்
தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டு தரவேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப்
பாலித்திட வேணும்…”

தன்னை காதலனாக பாவித்து, கண்ணனை செல்ல கண்ணம்மாவாக உருவகித்து உருகி உருகி காதல் செய்தானே…!!!

“சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே…”

ஆகா… என்னா…!!! அற்புத வரிகள்.!!!

காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;
என்று கண்ணனை நோக்கி பாடினானே…!!!

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? என்று சிவசக்தியிடம் உக்கிரம் கொண்டானே…!!!

நாட்டு விடுதலைக்காக எழுதிய பாடல்கள் எண்ணில் அடங்காதவை.

“அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே;
இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்; அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே”

“வந்தே மாதரம் என்போம்-எங்கள் மாநிலத் தாயை வணங்குதல் என்போம்,
தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!,

என்று ஒவ்வொரு வரியும் நாட்டு மக்களின் விடுதலை வேட்கையை தூண்டியவை. பெண் விடுதைக்காக பாடு பட்டவன். பாரதி கண்ட புதுமை பெண்கள் நாட்டில் நடமாட தொடங்கி விட்டனர்.சாதி ஒழிப்புக்கு அவன் பாடிய பாட்டே,

கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இல்லை…
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றத பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்”

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்றவைத்தார்களாம். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்து அவர் பாடியது தான்,
“பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா…”

ஒருமுறை காந்தியை பார்க்க சென்ற பாரதி, நாளை நான் கடற்கரையில் பேசுகிறேன், தாங்கள் வந்து தலைமை வகிக்க வேண்டும் என்று கேட்டாராம். ஏதோ ஒரு இயக்கம் தொடக்க விழா இருப்பதால் உங்கள் கூட்டத்தை ஒரு நாள் தள்ளி வைக்க முடியுமா என்று கேட்டாராம் காந்தி. அதற்கு, “அது முடியாது. ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி” என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந்த காந்தி “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்” என்று அருகில் இருந்தவர்களிடம் சொன்னாராம். தான் நினைத்தை தெளிவாக எந்த பயமும் இல்லாமல் யாரிடமும் பேசும் என் முண்டாசுக்கவி, அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே என்று சூளுரைத்ததில் எந்த ஆசிரியமும் இல்லை தானே.

பாரதி செல்வ செழிப்பாக வாழ்க்கையை நடத்த வில்லை. செல்லம்மா வீட்டை நடத்த பெரும் பாடு பட்டு இருக்கிறார். மனிதருக்கும் ஜீவராசிக்கும் வேறுபாடு பார்க்காதவர் பாரதி. தனது வீட்டில் உள்ள உணவுகளை சக ஜீவராசிகளுக்கும் கொடுத்தவர்.

பார்த்தசாரதி கோவில் யானை அர்ஜுனனால் தாக்கப்பட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். தனது இன்னுயிர் அவர் உடம்பிலிருந்து நீங்கும் போது அவருக்கு 39 வயது கூட பூர்த்தி ஆகவில்லை. ஆனால் இன்னும் 1000 ஆண்டுகளுக்கு தமிழில் இவ்வளவு புதுமை செய்ய யாரும் பிறக்கப்போவதில்லை என்று சொல்வது மிகை அல்ல.

இன்றும் தனது வரிகளால், ஒரு ஊக்கு சக்தியாக, உந்து சக்தியாக, பல இளங்கவிஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார் பாரதி. அவர் பிறந்த மண்ணில் இருந்த வந்த நான் பெருமையுடனும், கர்வத்துடனும் சொல்வேன்…

தமிழனென்று சொல்லடா…!!! தலை நிமிர்ந்து நில்லடா…!!!

அடுத்த பதிவில் சந்திப்போம்

அன்புடன்,
பி.கே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s